திமுக மீதான நம்பிக்கையை மீட்டெடுங்கள்!

திமுக மீதான நம்பிக்கையை மீட்டெடுங்கள்!
Published on

தி முகவின் நம்பிக்கையும், பிரசினையும் ஒன்றேதான்.அது மக்கள் அதனிடம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு. 

அது இத்தனை காலம் பெற்று வந்த வெற்றியும் தோல்வியும் இந்த எதிர்பார்ப்பை அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்தவை. நம்பிக்கை மிகும் போது வெற்றியும் சரியும் போது தோல்வியும் அதற்குக் கிட்டின. மக்கள் தங்கள் நம்பிக்கையை அளவிட்டுக் கொள்ளப் ப்யன்படுத்திக் கொள்ளும் உரைகல் பிறகட்சிகளோடு திமுக மேற்கொள்ளும் அணுகுமுறை. ஒரு எதிர்கட்சியாக அது ஆளும்கட்சிக்கான கடிவாளமாகவும், மற்றக் கட்சிகளைப் பொறுத்தவரை ஈர்த்து தன்னிடம் இருத்திக் கொள்ளும் காந்தமாகவும் இருக்க வேண்டும்  என்ற அடிப்படையில் திமுக மக்களால் மதிப்பிடப்படுகிறது.

இந்த அம்சங்களைக் கருணாநிதி கையாண்ட அளவிற்கு ஸ்டாலின் கையாளவில்லை என்பது பொதுவான கருத்து. ஸ்டாலின் இந்த அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும். அதுவே 

திமுக மீதான நம்பிக்கையை  மீட்டெடுப்பதற்கு ஸ்டாலின் செய்யவேண்டிய முக்கியப் பணி. ஆனால் அதற்கு முதலில் நாம் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அவர்களின் மனப்பாங்கு கடந்தமுறை ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தால்தான் நாம் தோற்றுப்போனோம். தேர்தல் கூட்டணி கணக்குகள் சரியில்லை. அதனால்தான் தோல்வி. மற்றபடி மக்கள் நம்பிக்கையை நாம் இழக்கவில்லை என அவர்கள் நினைக்கிறார்கள்.  

கடந்தமுறை இருந்த திமுகவுக்கு மாற்று அதிமுக; அதிமுகவுக்கு மாற்று திமுக என்பதில் இன்றுவரை மாற்றம் இல்லை. ஆனால் தேர்தல்களில் அதிமுகவிற்கு வெற்றியைத் தேடித் தந்த தலைமை இன்று  இல்லை என்கிற சூழலில் அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை என மக்களும் அதிமுகவினரே கூடவும் நினைக்கும் சூழல் உள்ளது. இந்த சூழலை தங்களுக்கு மேலும்  சாதகமாகப் பயன்படுத்த மக்களிடம் திமுக மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியது முக்கியம். அதிமுக இல்லையெனில் நாம்தானே மாற்று என்ற மிதப்பு இருக்குமெனில் அது பயன்தராது.

கட்சியைச் சீரமைக்கவேண்டியது அடுத்த தாகச் செய்யவேண்டிய பணி. கட்சியில் நான் கேள்விப்படும்வரையில் தலைமைக்கும் அடிமட்டத்தொண்டர்கள் இடையிலும் தொடர்பு என்பது வலுவாக இல்லை. கலைஞருக்கு அடிமட்டத் தொண்டர்களிடம் இருந்து ஏதோ ஒருவகையில் செய்திகள் வரும். உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கும். ஆனால் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அந்த தொடர்பை மறித்துக்கொண்டு நடுவில் நிறையபேர் இருப்பதாக கட்சிக்குள் பேச்சு இருக்கிறது. அவர் ஒரு சிலருடைய அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்கிறார் என்று சொல்லப்பட்டது. அண்மைக்காலமாக அவர் இதைச் சரிசெய்ய முயற்சி செய்கிறார். மாவட்டங்களுக்குப் போகிறார். மாவட்ட செயலாளர்களின் செயல்களைப் பற்றி கேள்வி கேட்கிறார். அதுகுறித்த புகார்களை அவர் எதிர்கொள்கிறார். அந்த புகார்களை எதிர்கொள்வதுடன் நின்றுவிடாமல் அவற்றின் பேரில் அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்போது ஒருவர் இரு பதவிகளில் இருந்தால் விலகவேண்டும்  என்று அறிவிக்கப்பட்டிருப்பதுபோல் நடவடிக் கைகள் தொடரவேண்டும். கட்சியை சீரமைக்கும் வேலையில் அவர் இறங்கி இருக்கிறார். அதை முழுமையாகச் செய்யவேண்டும். பாதிக்கிணறு தாண்டியதுபோல் இருக்கக்கூடாது.

இன்னொரு விஷயம் கட்சிக்குள் புதிய ரத்தத்தைக் கொண்டுவருவது. புதிய இளைஞர்களைக் கவர்வதற்கு கமலஹாசன், ரஜினிகாந்த், தினகரன் போன்றவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் என்பது வருமானம் தரக்கூடிய தொழில் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறபடியால் அந்த சூழலைப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளைச் செய்கிறார்கள். கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினி ஆரம்பிக்க இருப்பதாகச் சொல்லப்படும் கட்சி, தினகரன் அணி ஆகிய இடங்களுக்கு இளைஞர்கள் சென்றால் அவர்களுக்கு அங்கே பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அந்த பதவியைக் கொண்டு எதாவது செய்யமுடியும் அல்லது பொருளாதார ரீதியாக தங்களை சீரமைத்துக் கொள்ளமுடியும் என்று நினைப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமே. அதனால் இளைஞர்கள் அங்கு செல்ல முயற்சிப்பார்கள். சென்றுகொண்டும் இருக்கிறார்கள். இந்த சூழலில் இளைஞர்களை எப்படி கூடுதலாக கட்சிக்குள் கொண்டுவரப்போகிறார் ஸ்டாலின் என்பது முக்கியமான ஒரு கேள்வி. ஏனெனில் இளைஞர்கள்தான் வாக்காளர்களில் கணிசமான இடத்தை நிரப்பப்போகிறவர்கள்.

சமூக ஊடகங்களில் இளைஞர்கள் தன்னைப்பற்றி, திமுகவைப் பற்றி நன்றாக எழுதுகிறார்கள் எனவே இளைஞர்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்ற எண்ணத்துக்கு அவர் போய்விடக்கூடாது. அதில் கவனமாக இருக்கவேண்டும். சமூக ஊடகங்களில் இருக்கும் திமுக ஆதரவு இளைஞர்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதில் அவர் தெளிவாக இருக்கவேண்டும்.

மக்களுக்கு அதிமுக அரசுமீது அதிருப்தி இருக்கிறது. அடுத்தமுறை தங்களுக்கு ஆட்சியில் தொடரும் வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் அந்த கட்சிக்குள்ளும் இருக்கிறது. ஆகவே இந்நிலையில் இருக்கும் அதிமுகவையே திரும்பத் திரும்பத் தாக்குவதில் அர்த்தமில்லை. திமுகவின் வாக்குகள் பிரிந்துபோகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்பதையே முதன்மையாக அவர் யோசிக்க வேண்டும். அதற்கு பெரிய கூட்டணியைக் கட்டவேண்டுமா? அதைக் கட்டுவதானால் என்ன நிபந்தனைகளின் பேரில் அதைக் கட்டுவது? கூட்டணிக்கட்சிகளை ஒருங்கிணைப்பதும் அவ்வளவு எளிதல்ல. பல புதிய அமைப்புகள் வருகையில் அந்த புதுமைக்கான கவர்ச்சி மக்களிடையே இருக்கும்போது சிறியகட்சிகள் அந்த புதிய அமைப்புகளின் சார்பில் சென்றுவிடும் வாய்ப்பும் உள்ளது.

இரு சவால்கள் அவர் முன் நிற்பதாகத் தோன்றுகிறது. ஒன்று திமுகவின் வாக்குகளைக் காப்பாற்றுவது. இரண்டாவது, அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் தங்களுக்கே விழும்படி பார்த்துக்கொள்ளுவது. இந்த இரண்டு சவால்களையும் சந்திக்க அவருக்கு தெளிவான திட்டம் வேண்டும். பிறகட்சிகளுடனான உறவுகளை இதற்குப்பேண வேண்டியது அவசியம். இதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.

மார்ச், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com